புதுக்கோட்டை அருகே பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை - தஞ்சை மெயின் ரோட்டில் நேற்றுக்காலை ஒருமணி நேரம்வரை போக்குவரத்து தடைபட்டது.
பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்தது. புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்ல பயணிகளிடமிருந்து ஏற்கனவே சாதாரண விரைவு பஸ்களில் ரூ.18, பி.பி., பஸ்களில் ரூ.20 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது சாதாரண பஸ்களில் ரூ.25, பி.பி., பஸ்களில் ரூ.33 வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு பயணிகளிடமிருந்து மேலம் அதிக கட்டணம் வசூல் செய்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து திருச்சி, மதுரை, தஞ்சை, காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த சாதாரண விரைவு பஸ்கள் அனைத்தும் பி.பி., பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. பயணிகளை கசிக்கி பிழியும் விதமான அரசு போக்குவரத்துக் கழகங்களின் இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் பஸ் பயணிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. 50 முதல் 80 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள பயணிகள் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை அடுத்த இச்சடியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், வாபஸ் பெறக் கோரியும் அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதால் பெரும்பரபரப்பு நிலவியது. போராட்டத்தை தொடர்ந்து புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் நேற்றுக்காலை 8.15 மணி முதல் 9.15 மணிவரை பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தடைபட்டது. இதன்காரணாக பஸ்களில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர். சம்பவஇடம் வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தினர். பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. இதற்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென்பது பயணிகளை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இருந்தும் மறியல் போராட்டத்தை கைவிட அப்பகுதி மக்கள் மறுத்ததால் ஆத்திரமடைந்த போலீஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்கினர். இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., தமிழ்ச்சந்திரன் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: புகார் மற்றும் கோரிக்கைகளுக்கு தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாண வேண்டும். மாறாக போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment