Friday, June 24, 2011

ஜெ.ஜெ.கல்லூரியில் இலவச திறன்சார் தொழில்நுட்ப பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஜெ.ஜெ.கல்லூரியில் எவரான் ஸ்கில் நிறுவனத்தின் சார்பில் இளைஞர்களுக்கான இலவச திறன்சார் தொழில்நுட்ப பயிற்சி வரும் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், டிரைவிங், தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வரைபடம், ஆட்டோமேஷன், சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சில்லறை வணிகம், ஜவுளி மற்றும் தையல் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்சார் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் சான்றிதழ்கள் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புக்கான உத்தரவும் வழங்கப்படும். எனவே, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலவச திறன்சார் பயிற்சிபெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்லூரி நிர்வாகத்தை தொடர்புகொள்ளலாம்.

"ஆப்ரேஷன் ஹம்லா' ஒத்திகை நிகழ்ச்சி புதுகை கலெக்டர், எஸ்.பி., நேரில் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிரவாத செயல்களை முறியடிப்பதற்கான போலீஸாரின் "ஆப்ரேஷன் ஹம்லா' ஒத்திகை நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதை கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தீவிரவாதச் செயல்களை முறியடிக்கும் விதமாக போலீஸார் மற்றும் இதர அரசுத்துறையினர் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் "ஆப்ரேஷன் ஹம்லா' என்ற ஒத்திகை நிகழ்ச்சியை போலீஸார் நடத்திவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. எஸ்.பி., முத்துசாமி தலைமையில் ஸ்டேஷன் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், அதிரடிப்படையினர், அதிவிரைவுப்படையினர், போக்குவரத்து போலீஸார், செக்போஸ்ட் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள், தீயணைப்பு படையினர், கடலோரக்காவல் படையினர், வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர், மருத்துவத்துறையினர் என 300 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைப்பட்டிணம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கடல் மார்க்கமாக வரும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை கடலோரக் காவல்படையினர் நேற்று நிகழ்த்திக்காட்டினர். மாறுவேடங்களில் வரும் தீவிரவாதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி கோடியக்கரை மற்றும் கட்டுமாவடி பகுதிகளில் நடந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போலீஸாரின் ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., முத்துசாமி, கடலோர காவல்படை டி.எஸ்.பி., அம்சவள்ளி ஆகியோர் நேற்று அப்பகுதிகளுக்கு நேரில்சென்று ஆய்வு செய்தனர். ஆப்ரேஷன் ஹம்லா ஒத்திகை நிகழ்ச்சி மூன்றாவது நாளாக இன்றும் நடக்கிறது.

Saturday, June 18, 2011

தனியார் பள்ளி புதிய கட்டணம் இணையதளத்தில் வெளியீடு


தமிழகம் முழுவதும் 6,355 தனியார் பள்ளிகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டண விவரங்கள், பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த, கல்விக் கட்டணம் மிகவும் குறைவு என கூறி, 6,355 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இந்த பள்ளிகளுக்கு, குழுவின் இரண்டாவது தலைவராக பதவியேற்ற, ரவிராஜ பாண்டியன், புதிய கட்டணத்தை நிர்ணயித்தார். புதிய கல்வி கட்டண விவரங்கள், கடந்த 14ம் தேதி ஒரு பகுதியும், 15ம் தேதி மற்றொரு பகுதியும் வெளியிடப்பட்டன.

எனினும், இணையதளத்தில் வெளியிடாததாலும், பள்ளிகளில் புதிய கட்டண விவரங்கள் வெளியிடாததாலும், கட்டண விவரம் தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில், www.pallikalvi.in என்ற பள்ளி கல்வித்துறை இணையதளத்தில், தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள், நேற்று வெளியிடப்பட்டன.

மாவட்ட வாரியாக, 32 மாவட்டங்களில், மேல் முறையீடு செய்த அனைத்து பள்ளிகளுக்கும், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையில், ஒரு ஆண்டுக்கு, ஒரு மாணவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்கள் தெளிவாக வெளிடப்பட்டுள்ளன.

ஜூலை 6ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி குறித்த அறிக்கை தயார்


சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களின் தரத்தை ஆராய, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இக்குழு, பாடத்திட்டத்தின் தரத்தை ஆய்வு செய்து, ஜூலை 6 க்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் முதல்வர் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்களுக்கு தரமான, சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2010ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட், சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜூன் 15ல் வழங்கிய உத்தரவில், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாட நூல்களின் தரம் ஆகியவை குறித்து ஆராய, தலைமைச் செயலர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைக்க வேண்டும் என்றும், இக்குழு, ஜூலை 6க்குள் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தலைமைச் செயலர் தலைமையில், எட்டு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு, ஜூலை 6க்குள், தனது அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

நிபுணர்கள் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும். அதன் பிறகே, இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்புகளுக்கான பாடத்திட்ட விவரங்கள் தெரிய வரும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை. இதர வகுப்பு மாணவர்களுக்கு, சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வரும் வரை, மூன்று வாரங்களுக்கு செய்முறை அடிப்படையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து, பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு துணைத் தேர்வு 20ம்தேதி ஹால்டிக்கெட்1


வரும் 22ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 20 மற்றும் 21ம்தேதி வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2  தேர்வினை பள்ளி மாணவராகத் தேர்வெழுதி ஒன்று முதல் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்து, தற்போது தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக சிறப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஹால்டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

மார்ச் மாத மேல்நிலைத் தேர்வு அல்லது அதற்கு முந்தைய பருவங்களில் தனித் தேர்வர்களாகத் தேர்வெழுதி ஒன்று அல்லது 3 பாடங்கள் வரை தோல்வியடைந்து, சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வரும் 22ம்தேதி துவங்கி ஜூலை 2ம்தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு வரும் 20 மற்றும் 21ம்தேதிகளில் ஹால்டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஹால்டிக்கெட் வினியோகிக்கப்படும் இடங்கள் கல்வி மாவட்டங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு - செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
காஞ்சீபுரம் - ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்
பொன்னேரி - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
திருவள்ளூர் - டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்
சென்னையில் அனைத்து கல்வி மாவட்டங்கள் - மதரசா-ஐ-ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை (ஸ்பென்சர் சிக்னல் அருகில்).

ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் பதிவு எண், தேர்வு மையம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த மையத்தில் தேர்வு எழுத வேண்டும். மேலும், செய்முறை, மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைச் செய்ய வேண்டியவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தேர்வைச் செய்ய வேண்டும்.

Thursday, June 2, 2011

அறிவில் சிறந்தவர்கள் மாணவிகளா? மாணவர்களா?

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும், மறுபக்கம் நுழைவுத் தேர்வு முடிவுகளும் வெளியாகி மாணவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தும் காலம் இது.
எப்போதுமே படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி மாணவிகளுக்கே முதல் இடம். ஏனெனில் எதிலும் பொறுப்பாக படிப்பார்கள், வேலை செய்வார்கள் என்பதுதான் காரணம்.
அதற்கேற்ப பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் முதல் இடங்களைப் பிடித்த மாணவிகளின் எண்ணிக்கையும் அமைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஆண்டு தோறும் மாணவர்களை, விட மாணவிகளே அதிக விழுக்காடு தேர்ச்சி ஆவதும், ஏதோ மாணவர்கள் முட்டாள்கள் என்றும், மாணவிகளே அறிவாளிகள் என்று எண்ணத்தை மனதில் வேரூன்ற வைத்துவிட்டது.
ஆனால் இது உண்மையா? இல்லை என்பதே ஆழமாக சிந்திக்கும் சிந்தனையாளர்களின் கருத்தாகும்.
அறிவு என்பது வெறும் புத்தகத்தைப் படித்து அதனை மனப்பாடமாக விடைத்தாளில் எழுதுவது மட்டும் அல்ல, அதையும் தாண்டி பரந்து விரிந்து உள்ளது.
இந்த இடத்தில்தான் மாணவர்களிடம், மாணவிகள் தோல்வி அடைந்து விடுகிறார்கள். பள்ளிப் படிப்பு வரை படித்து எழுதி அதிக அளவில் தேர்ச்சி பெறும் மாணவிகள், அடுத்து வரும் பல்வேறு தேர்வுகளில் குறைந்த அளவில் தேர்ச்சி பெறக் காரணம் என்ன?
இதற்கு உதாரணமாக இந்த வாரம் வெளியான ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவில் தமிழகத்தில் சுமார் 227 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 200 பேர், மாணவிகள் வெறும் 27 பேர்தான். இதற்குக் காரணம் என்ன? போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றில் மாணவிகளை விட, மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறக் காரணம் என்ன? அவர்களது அறிவுத் திறன்தான்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் பொதுத் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதை வைத்துக் கொண்டு, மாணவர்களை மதிப்பிடக் கூடாது என்பதுதான் உண்மை

இந்திய டுடே டாப் டென் கலை கல்லூரிகள்

Rank College Name
1 லயோலா கல்லூரி, சென்னை
2 லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி, டெல்லி
3 புனித ஸ்டீபென் கல்லூரி, டெல்லி
4 புனித சேவியர் கல்லூரி, மும்பை
5 புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா
6 கிறிஸ்ட் கல்லூரி, பெங்களூர்
7 பிரெசிடென்சி கல்லூரி, கொல்கத்தா
8 மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், சென்னை
9 ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, சென்னை
10 ஃபர்குசன் கல்லூரி, பூனே

அரசின் இலவச அரிசி வழங்கும் பணி துவக்கம்: புதுகையில் எம்.எல்.ஏ., கலெக்டர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான புழுங்கல் அரிசி வழங்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் முதல் திட்டமான இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் நேற்று தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 அர்பன் ஸ்டோர் உட்பட 935 ரேஷன் கடைகள் மூலம் தரமான புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இத்திட்டத்தின் மூலம் நான்கு லட்சத்து 2,666 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைய உள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இலவச அரிசி வாங்கியுள்ளனர்.
ரேஷன் கார்டுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தேவையான அரிசி இருப்பு வைக்கப்பட்டு விடுமுறை நாட்களை தவிர மாதம் முழுவதும் இலவச ரேஷன் அரிசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதால் நேற்று ரேஷன் கடைகள் முன் அரிசி வாங்க நெருக்கடி எதுவும் தென்படவில்லை. இதற்கிடையே இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அமைக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் நேற்றுமுன்தினம் முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் சென்று இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசியை ஆய்வு செய்தனர். தரம் குறைந்த அரிசி மூடை அப்புறப்படுத்தப்பட்டு தரமான அரிசி மூடை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை டவுன் தெட்சிணாமூர்த்தி மார்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் துவக்கி வைத்தார். ஒருசில கடைகளை தவிர மீதமுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை விற்பனையாளர்களே துவக்கி வைத்தனர்.