Sunday, January 15, 2012

புதுகையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக குவிந்த மக்கள் கூட்டத்தால் புதுக்கோட்டை கடைவீதிகள் நேற்று களைகட்டியது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டையில் நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.இதன்காரணமாக கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, தெற்கு நான்காம் வீதி, சத்தியமூர்த்தி மார்கெட், வடக்கு ராஜவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் பொங்கல் வியாபாரத்தால் களைகட்டியது.

மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகள் மட்டுமின்றி சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் கரும்பு, மஞ்சள் மற்றும் வாழைத்தார்கள் லாரிகள் மூலம் கொண்டுவந்து விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தது.இவற்றின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகம் என்றாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தரத்தை பொறுத்து 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 160 முதல் 220 ரூபாய் வரையிலும் விற்பனையானது. பெருஞ்சுனை, சிறுஞ்சுனை உள்ளிட்ட மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகளிலிருந்து கரும்பு வரத்து அதிகரித்ததால் நேற்று மதியத்துக்கு மேல் கரும்பு விலை வீழ்ச்சியடைந்தது.காலையில் 200 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கட்டு கரும்பு மாலையில் 120 ரூபாயாக குறைந்தது. இதுபோன்று மஞ்சள், வாழைத்தார், காய்கறிகள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விலையும் படிப்படியாக குறைந்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலை மூலம் பச்சரிசி, வெல்லம், பாசிபருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பை எடையை பொறுத்து 75 மற்றும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இதுபோன்று தரமான 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.160 க்கும், ஒருபிடி மஞ்சள் கொத்து ரூ.10க்கும், கருணைக்கிழங்கு கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. மலிவு விலையில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் இவை நகர்ப்பகுதி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.பொங்கல் வைப்பதற்காக அனைவரும் விரும்பி வாங்கும் மண் பானை மற்றும் அடுப்புகள் வரத்து குறைந்ததால் விலை ஜெட் வேகத்தில் எகிறியது. கடந்த ஆண்டு ரூ.20க்கு விற்பனையான நடுத்தர பானை நேற்று ரூ.80க்கு விற்பனையானது. இதுபோன்று அடுப்பின் விலையும் நான்கு மடங்கு அதிகரித்தது. விலை எகிறிவிட்டது என்பதற்காக இவற்றின் விற்பனை குறையவில்லை.பானை, அடுப்பு, மூடி போன்ற மண்பாண்ட பொருட்களை கிராமப் பகுதியினர் மட்டுமின்றி நகர்ப்பகுதியினரும் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பாத்திரக்கடை, துணிக்கடை, நகைக்கடை மற்றும் ஃபேன்ஸி ஸ்டோர்களிலும் பொங்கல் வியாபாரம் நேற்று களைகட்டியது.

Tuesday, January 3, 2012

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு


இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி தேர்வுத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்
ஏப்ரல் 6ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 16ம் தேதி கணிதத் தேர்வு
ஏப்ரல் 19ம் தேதி அறிவியல் தேர்வு
ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தினால், அரசு மற்றும் மெட்ரிக் என சி.பி.எஸ்.இ. தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே பாடப்பிரிவின் கீழ் தேர்வு எழுத உள்ளனர்.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் இம்முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.