Tuesday, October 11, 2011

அறந்தை தேர்தலில் பின்னடைவு கா வேட்பாளர்களை எதிர்த்து களத்தில் போட்டி வேட்பாளர்கள்

புதுக்கோட்டை: அறந்தாங்கி நகராட்சியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் அணி, வாஸன் அணி, மாநிலத் தலைவர் தங்கபாலு அணி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அணி மற்றும் இளங்கோவன் அணி என ஐந்து அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதன்காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இறுதிகட்டம் வரை இழுபறி நிலை நீடித்தது. இதன்காரணமாக விருப்பமனு கொடுத்த காங்கிரஸ் கட்சியினர் பலர் சுயேச்சையாக போட்டியிட முடிவுசெய்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாய்ப்பு கிடைக்காத பலர் சுயேச்சையாக தாக்கல் செய்த வேட்புமனுவை வாப்பஸ் பெற மறுத்து போட்டியிடுகின்றனர்.குறிப்பாக, அறந்தாங்கி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏற்கனவே ஜெலீலா பேகம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளரான இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கட்சி மேலிடத்திடம் அறந்தாங்கி நகர காங்கிரஸ் கட்சியினர் பரிந்துரை செய்திருந்தனர்.இந்நிலையில், திருநாவுக்கரசர் ஆதரவாளரான பிஸ்மில்லா பேகம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு கை சின்னம் வழங்கப்பட்டுள்ளது.வாய்ப்பை எதிர்பார்த்து ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த ஜெலீலா பேகம் மனுவை வாபஸ் பெறவேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இதை ஏற்க மறுத்த ஜெலீலா பேகம், காங்கிரஸ் கட்சியின் போட்டி வேட்பாளராக "புத்தகம்' சின்னத்தில் ஓட்டு சேகரித்து வருகிறார். இவருக்கு சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் பக்கபலமாக உள்ளனர்.இதுபோன்று கவுன்சிலர் பதவிக்கும் போட்டி வேட்பாளர்கள் பலர் களத்தில் உள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அறந்தாங்கி நகராட்சியை பொறுத்தமட்டில் தலைவர் பதவிக்கு ஆறு பேரும், மொத்தமுள்ள 27 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 144 பேரும் போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment