தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் ஜெ., இன்று அளித்துள்ள விளக்கத்தில் விலையை உயர்த்தாத பட்சத்தில் பொதுதுறை நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும் என்றும், இது தொடர்பாக கருணாநிதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்றும் , ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்உங்களால்தான் முடியும் என்று கூறியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என கூறியுள்ளார். இதற்கிடையில் மதுரையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் , தமிழகத்தில் விலை உயர்வை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் கும்பல் ஆட்சி நடக்கிறது என்றார்.
விலைஉயர்வு குறித்து இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில்: பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை உயிர்பிப்பிக்கவும், நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றவும் வழிவகை குறித்து 17.11.2011 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதன் காரணங்களை அன்றே தொலைக்காட்சி மூலம் நான் எடுத்துரைத்து , அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவினை நல்கிட வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன். இந்த கட்டண உயர்வுகளை கண்டித்து, பல்வேறு எதிர்க் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தக்கட்டண உயர்வுகளுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலனை விடுத்து வேறு பல காரணங்களுக்காக பல்வேறு முடிவுகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுத்த காரணத்தால்தான், எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட வழங்காமல், சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதற்கு, பொதுத்துறை நிறுவனங்களை முந்தைய தி.மு.க. அரசு சீரழித்ததும் ஒரு காரணம். இது போன்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு எனது தலைமையிலான அரசை ஆளாக்கிவிட்டு, தாங்கள்தான் மக்களை பாதுகாப்பதைப்போல நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் செயல் சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது.
மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் , ஆவின் நிறுவனம் ஆகிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாக்கி அவற்றை செயலிழக்கச் செய்த பெருமை முந்தைய மைனாரிட்டி திமுக அரசையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையுமே சாரும். அரசு அதிகாரிகள், கட்டணங்களை உயர்த்த இவரிடம் கேட்டுக்கொண்டது போலவும், ஆனால் மக்களுக்காக இவர் உயர்த்த வேண்டாம் என்று கூறி அரசு கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று தான் கூறியதைப் போலவும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதா ? பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலும் முடங்கச் செய்துவிட்டு, அவற்றை மரணப்படுக்கையில் தள்ளி விட்டு, இன்று வேறு வழியின்றி கட்டண உயர்வுகள் செயல்படுத்தப்படும் போது மக்களுக்காக பரிந்து பேசுவது போல பாசாங்கு செய்வது குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது.இது முதலைக் கண்ணீர்தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இது போன்ற அறிக்கைகளால், தமிழக மக்கள் ஒன்றும் ஏமாந்துவிட மாட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்களை முடக்கிய கருணாநிதிக்கு இது போன்ற ஒரு கண்டன அறிக்கையை வெளியிட எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலைச் சந்தித்து, தற்போது தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், என்னைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.
அப்போது, தமிழ்நாட்டின் மோசமான நிதிநிலை குறித்தும், மைனாரிட்டி திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், பொது மக்கள் நலனை எண்ணிப்பாராத செயல்பாடுகள் குறித்தும் என்னிடம் கவலை தெரிவித்தனர். இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றும்; நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னால்தான் இவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்றும்; கடினமான முடிவுகளை, தைரியமாக, என்னால் தான் எடுக்க முடியும் என்றும் கூறினர்.அப்போது அவ்வாறு கூறிவிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வுகளுக்கு கண்டன அறிக்கைகளை விடுவது சரியான செயல்தானா என்பதை அவர்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகிறேன். முன்பு, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்தும், பொதுத் துறை நிறுவனங்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்தவர்கள், தற்போது கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடம் தானே! பொதுமக்கள் நன்கு உணர்ந்து அரசியல் ஆதாயத்திற்கென அறிக்கை விடுபவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்காமல், அவர்கள் விரிக்கும் மாயவலையில் விழாமல், எனது தலைமையிலான அரசுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களை மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெ., தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை திருமண விழாவில் விஜயகாந்த் ஆவேசம்: மதுரையில் நடந்த திருமண விழாவில் பேசிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்: “தமிழகத்தில் பால் மற்றும் பஸ் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் மத்திய அரசு நிறைய நிதி தருகிறது. இதைச் சொன்னால் நான் காங்கிரசுக்கு ஆதரவானவன் என்று கூறுவார்கள். ஆனால் நான் நியாயத்தை கூறுகிறேன். மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த தமிழக மக்களுக்கு தற்போது ஏமாற்றத்தை தந்துள்ளது தமிழக அரசு. குடும்ப ஆட்சி போய் தற்போது கும்பல் ஆட்சி நடந்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கிறேன். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment