Friday, June 24, 2011

"ஆப்ரேஷன் ஹம்லா' ஒத்திகை நிகழ்ச்சி புதுகை கலெக்டர், எஸ்.பி., நேரில் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிரவாத செயல்களை முறியடிப்பதற்கான போலீஸாரின் "ஆப்ரேஷன் ஹம்லா' ஒத்திகை நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதை கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தீவிரவாதச் செயல்களை முறியடிக்கும் விதமாக போலீஸார் மற்றும் இதர அரசுத்துறையினர் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் "ஆப்ரேஷன் ஹம்லா' என்ற ஒத்திகை நிகழ்ச்சியை போலீஸார் நடத்திவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. எஸ்.பி., முத்துசாமி தலைமையில் ஸ்டேஷன் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், அதிரடிப்படையினர், அதிவிரைவுப்படையினர், போக்குவரத்து போலீஸார், செக்போஸ்ட் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள், தீயணைப்பு படையினர், கடலோரக்காவல் படையினர், வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர், மருத்துவத்துறையினர் என 300 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைப்பட்டிணம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கடல் மார்க்கமாக வரும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை கடலோரக் காவல்படையினர் நேற்று நிகழ்த்திக்காட்டினர். மாறுவேடங்களில் வரும் தீவிரவாதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி கோடியக்கரை மற்றும் கட்டுமாவடி பகுதிகளில் நடந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போலீஸாரின் ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., முத்துசாமி, கடலோர காவல்படை டி.எஸ்.பி., அம்சவள்ளி ஆகியோர் நேற்று அப்பகுதிகளுக்கு நேரில்சென்று ஆய்வு செய்தனர். ஆப்ரேஷன் ஹம்லா ஒத்திகை நிகழ்ச்சி மூன்றாவது நாளாக இன்றும் நடக்கிறது.

No comments:

Post a Comment