சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களின் தரத்தை ஆராய, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இக்குழு, பாடத்திட்டத்தின் தரத்தை ஆய்வு செய்து, ஜூலை 6 க்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் முதல்வர் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்களுக்கு தரமான, சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2010ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட், சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜூன் 15ல் வழங்கிய உத்தரவில், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாட நூல்களின் தரம் ஆகியவை குறித்து ஆராய, தலைமைச் செயலர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைக்க வேண்டும் என்றும், இக்குழு, ஜூலை 6க்குள் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தலைமைச் செயலர் தலைமையில், எட்டு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு, ஜூலை 6க்குள், தனது அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கும் என அறிக்கையில் கூறியுள்ளார்.
நிபுணர்கள் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும். அதன் பிறகே, இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்புகளுக்கான பாடத்திட்ட விவரங்கள் தெரிய வரும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை. இதர வகுப்பு மாணவர்களுக்கு, சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வரும் வரை, மூன்று வாரங்களுக்கு செய்முறை அடிப்படையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து, பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment