புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அதிக ஆர்வம் செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்வது வழக்கம். பணிநியமனங்களுக்கு பதிவுமூப்பு பின்பற்றப்படுவதால் மாணவர்கள் அனைவரும் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மறுநிமிடமே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முன்பு குவிந்துவிடுகின்றனர். இதனால் ஏற்படும் இடநெருக்கடியை சமாளிப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. இருந்தும் பதிவு செய்வதில் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதை தவிர்க்கும் விதமாக ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளும் சிறப்பு திட்டத்தை அரசு துவக்கியுள்ளது. இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை எந்தவித சிரமமும் இன்றி படித்த பள்ளிகளிலேயே நேற்று பதிவு செய்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 790 மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆன்-லைன் வசதி செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் வரிசையில் நின்று ரேஷன் கார்டு நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை காண்பித்தவாறு பதிவு செய்தனர். இதற்காக அந்த பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளும் வசதியை உருவாக்கி கொடுத்த தமிழக அரசுக்கு அம்மாவட்ட மாணவர்களும், பெற்றோர்களும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment