புதுக்கோட்டை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் எம்.பி., கனிமொழி கைது சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் மூன்று மணி முதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீஸார் முடுக்கிவிடப்பட்டனர். இரவுநேர ரோந்து பணிகளும் முடுக்கி விடப்பட்டது. பஸ்கள் மீது கல் வீச்சு மற்றும் தீ வைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவுநேர ஸ்டே பஸ்களை டிப்போவுக்குள் மட்டுமே நிறுத்த வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நேற்றுமாலை ஆறு மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் 12 டவுன் மற்றும் மப்சல் பஸ்கள் இரவுநேர ஸ்டே பஸ்களாக கிராமப்பகுதிகளில் நிறுத்தி வைப்பது வழக்கம். மணமேல்குடி, எஸ்.பி., பட்டிணம், கொத்தமங்கலம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பஸ்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை ஐந்துமணி வரை இரவுநேர ஸ்டே பஸ்களாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதுபோன்று அறந்தாங்கி, பொன்னமராவதி, பட்டுக்கோட்டை, திருச்சி டிப்போக்களிலிருந்து இயக்கப்படும் 60 பஸ்கள் வரை மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட கிராமப்பகுதிகளிலும் இரவுநேர ஸ்டே பஸ்களாக நிறுத்தி வைப்பது வழக்கம். பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு கருதி கிராமப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் இரவுநேர ஸ்டே பஸ்கள் அனைத்தையும் தொடர்புடைய அரசு போக்குவரத்துக்கழக டிப்போக்களில் மட்டுமே நிறுத்தவேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவை போலீஸார் மூலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக்கழக டிப்போக்கள் முன் நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
No comments:
Post a Comment