புதுக்கோட்டை: இழப்பீடு தொகை அளிப்பதில் வேளாண்மைத்துறை மெத்தனம் காண்பித்ததால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக தளவாடப் பொருட்கள் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகாரிகள் மேற்கொண்ட சமரசத்தால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(35). அப்பகுதியில் கேபிள் "டிவி' நிர்வகித்து வருகிறார். 1998ம் ஆண்டு தனது டூ வீலரில் கடைவீதிக்கு சென்று திரும்பிய வெங்கடேஷ் மீது, வேளாண்மைத்துறைக்கு சொந்தமான ஜீப் மோதியது. விபத்தில் அவர் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் ஊனம் சரியாகவில்லை. தனக்கு ஏற்பட்ட ஊனத்துக்கு வேளாண்மைத் துறையிடமிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் வெங்கடேஷ் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு விபத்து இழப்பீடாக 89 ஆயிரம் ரூபாய் மற்றும் வட்டித்தொகை 6,500 ரூபாய் வழங்குமாறு வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மனுதாரர் வெங்கடேஷுக்கு ரூ.89 ஆயிரம் வழங்கிய வேளாண்மைத் துறை வட்டித் தொகை வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து வட்டித் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு அதே நீதிமன்றத்தில் வெங்கடேஷ் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு வட்டித் தொகை வழங்க தவறியதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக தளவாடப் பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. தகவலறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வேளாண்மைத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள், ஒருமணி நேரத்துக்குள் வட்டித் தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment